செய்திகள்

ஆட்சி கவிழ்ந்துவிடும் என முக ஸ்டாலின் ஆருடம் கூறுவதை நிறுத்த வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-09-19 10:02 GMT   |   Update On 2018-09-19 10:21 GMT
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சில நாட்களுக்குள் கவிழ்ந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் ஆரூடம் கூறி வருவதை நிறுத்த வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். #ponradhakrishnan

நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், நபார்டு வங்கி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் என்ன என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு துறைமுகம் அமைக்க வேண்டும். மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். நெல், வாழை, தென்னை, ரப்பர் பயிர்கள் மேம்பாடு அடைய என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலையாக மாற வேண்டும். குமரி மாவட்டத் தில் மூலிகை பண்ணை அமைப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு பேசிய பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் நாகரீகமான நல்ல மனிதர். அவர் வாயில் இருந்து அப்படிப்பட்ட வார்த்தை வந்திருக்கக்கூடாது. தற்போது அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.

பாரதீய ஜனதா மாநில தலைவர் குழந்தைபோல பேசுவதாக துரைமுருகன் கூறி உள்ளார். குழந்தையாக இருப்பதில் தவறு இல்லை. குழப்பவாதியாகத்தான் இருக்கக்கூடாது. தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்திய போராட்டம் அவர்கள் தங்களுக்கு எதிராகவே நடத்திய போராட்டம் ஆகும்.

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சில நாட்களுக்குள் கவிழ்ந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் ஆரூடம் கூறி வருகிறார். கிளி ஜோசியமே பலிக்காது. எனவே அவர் ஆரூடம் கூறுவதை நிறுத்த வேண்டும். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று பேச வேண்டும்.


மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதற்கு நிலம் தேர்வு செய்து கொடுப்பது மாநில அரசின் பொறுப்பு.

ஆசாரிப்பள்ளத்தில் இதற்காக 2½ ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆஸ்பத்திரி அமைக்க 5 ஏக்கர் நிலம் தேவை. மீதி உள்ள 2½ ஏக்கர் நிலத்தை மத்திய அரசு 21 கோடி கொடுத்து வாங்க தயாராக உள்ளது. ஆனால் மாநில அரசு இடம் தர வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் உடன் இருந்தார். #ponradhakrishnan #mkstalin #edappadipalanisamy

Tags:    

Similar News