செய்திகள்
புலியகுளத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மளிகை கடையில் இருந்து 200 கிலோ பறிமுதல்- பெங்களூரில் இருந்து கோவைக்கு குட்கா மூட்டைகள் கடத்தல்?

Published On 2018-09-19 07:29 GMT   |   Update On 2018-09-19 07:29 GMT
கோவை அருகே மளிகை கடை ஒன்றில் 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை:

கோவை புலியகுளம் பகுதியில் மளிகை கடை ஒன்றில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

அதன்பேரில் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு குட்கா விற்பனைக்காக இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் சுயம்புவிடம் (வயது 36) விசாரணை நடத்தினர்.

அப்போது கடைக்கு அருகே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விற்பனைக்காக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கிருத்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது குறித்து சுயம்புவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கோவையில் உள்ள 55 ஆவின் பாலகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது 14 கடைகளில் இருந்து 12.5 கிலோ கலப்பட டீத்தூள், 15 கிலோ அதிக நிறம் கலக்கப்பட்ட உணவு பொருட்கள், 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர். சோதனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

புலியகுளத்தில் சுயம்பு என்பவரது பெட்டிக்கடையில் இருந்து 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து தனியார் பஸ்கள், ரெயில்களில் குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக புகார் கூறப்படுகிறது. எனவே கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிகாலை நேரத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Gutka
Tags:    

Similar News