செய்திகள்

திண்டிவனத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை கொள்ளை

Published On 2018-09-17 11:52 GMT   |   Update On 2018-09-17 11:52 GMT
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 52). இவரது மனைவி திலகவதி. திண்டிவனத்தை அடுத்த பாதிரியாபுலியூரில் உள்ள அரசு பள்ளியில் கணபதி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு திலகவதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே வீட்டை பூட்டி விட்டு திலகவதியை திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கணபதி அழைத்துசென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

திலகவதியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அவருக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்காக கணபதி மட்டும் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தனர்.

மேலும் அதில் இருந்த 18 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து திண்டிவனம் போலீசில் கணபதி புகார் செய்தார். புகாரின் பேரில் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News