செய்திகள்

கோவை அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கணவன்-மனைவி பலி

Published On 2018-09-16 11:58 GMT   |   Update On 2018-09-16 11:58 GMT
தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை:

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 69). கோவில் பூசாரி. இவரது மகள் காயத்ரி கோவை வடவள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சீனிவாசன், அவரது மனைவி லட்சுமி (63), மகன் பால மோகன்(36) ஆகியோர் நேற்று இரவு காரில் கோவை புறப்பட் டனர். காரை பால மோகன் ஓட்டினார்.

நள்ளிரவு 1.15 மணி அளவில் கார் சேலம்- கொச்சின் பைபாஸ் சாலையில் கருமத்தம்பட்டி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் பாராத விதமாக கார் பால மோகனின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது. இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த சீனிவாசன், லட்சுமி ஆகியோர் ரத்தவெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பாலமோகன் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று பாலமோகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News