செய்திகள்

திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும்- அமைச்சர் வேலுமணி

Published On 2018-09-15 09:43 GMT   |   Update On 2018-09-15 09:43 GMT
அக்டோபர் 2-ந்தேதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
கோவை:

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவில் முன்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ், நடிகர் விவேக், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். தூய்மை பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 584 ஊராட்சிகளிலும் சிறந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 53 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஊராட்சிகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அக்டோபர் 2-ந் தேதிக்குள் அந்த ஊராட்சிகளும் இந்த திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும்.


வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு ஏற்ப பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகிக்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
Tags:    

Similar News