செய்திகள்
கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.

கூடுவாஞ்சேரி-மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி பாதி விலைக்கு விற்ற 3 பேர் கைது

Published On 2018-09-11 06:51 GMT   |   Update On 2018-09-11 06:51 GMT
கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி பாதி விலைக்கு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

கூடுவாஞ்சேரி:

கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஓட்டேரி பகுதிகளில் வீட்டின் முன்பு பஜார் வீதி மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வந்தது.

இது குறித்து கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மறைமலைநகர் போலீஸ் நிலையங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்படி வண்டலூர் டி.எஸ்.பி. வளவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பாஸ்கர், நந்த கோபால் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேளம்பாக்கத்தை சேர்ந்த பழனிதங்கம் (20), கூடுவாஞ்சேரி தைலாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (30) என்பதும், 20 நாட்களுக்கு ஒருமுறை புல்லட் மோட்டார் சைக்கிள் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரிந்தது.

போலீசில் சிக்காமல் இருக்க அவர்கள் இந்த நூதன முறையை கையாண்டு உள்ளனர்.

திருட்டு மோட்டார் சைக்கிள்களை அவர்கள் வில்லிவாக்கம், அயனாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் பாதி விலைக்கு விற்று உள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிள்களை விற்று பணம் கொண்டு வருவதற்காக தைலாவரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (28) என்பவரை கூட்டாளியாக சேர்த்து உள்ளனர். அவனையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 17 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 26 விலை உயர் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

கைதான 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News