செய்திகள்

கடலூரில் அனைத்து கட்சியினர் சாலை மறியல்- 150 பேர் கைது

Published On 2018-09-10 12:00 GMT   |   Update On 2018-09-10 12:00 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். இதில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike

கடலூர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.வும்., தி.மு.க.தேர்தல் பணிக்குழு செயலாளருமான இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று கடலூர் அண்ணா பாலத்துக்கு முன்பு உள்ள கடலூர்-புதுவை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தங்கராசு, நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வக்கீலுமான சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட ம.தி.மு.க.செயலாளர் என்.ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், நகர தி.மு.க.துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, காங்கிரஸ் கட்சி மாநில ஊடக பிரிவு பொதுச்செயலாளர் மணிகண்டன், மீனவரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ராம்ராஜ், தொ.மு.ச.தலைவர் பழனிவேல், நகர ம.தி.மு.க.செயலாளர் ராமசாமி, தி.மு.க. மாணவரணி அகஸ்டின் பிரபாகர் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாலைமறியல் போராட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.இள. புகழேந்தி உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை வேனில் ஏற்றிசென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike 

Tags:    

Similar News