செய்திகள்

குட்கா விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை - ஜெயக்குமார்

Published On 2018-09-08 00:19 IST   |   Update On 2018-09-08 00:20:00 IST
குட்கா விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #GutkhaScam #Jayakumar
ஆலந்தூர்:

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்க முடியாதது. பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரியை குறைத்தால் மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே அவற்றின் மீது தாங்கள் விதிக்கும் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்து இருக்கிறது.

குட்கா விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. சி.பி.ஐ. தனி அமைப்பு. இந்த வழக்கில் முகாந்திரம் இருக்கிறதா? இல்லையா? என்று சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரியும். இதில் என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை சி.பி.ஐ. எடுக்கும். சி.பி.ஐ.க்கு அரசியல் கட்சிகள் பாடம் நடத்தக்கூடாது.

தவறு செய்ததற்கான முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். யாராக இருந்தாலும் தவறு செய்தால் தவறுதான். இதில் மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #GutkhaScam #Jayakumar
Tags:    

Similar News