செய்திகள்

தொடரும் குடிநீர் பிரச்சினை- மாநகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2018-09-06 11:37 GMT   |   Update On 2018-09-06 11:37 GMT
திண்டுக்கல் நகரில்தொடரும் குடிநீர் பிரச்சனையால் 15-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் பழைய குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஜிகா பைப் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போராட்டம், மறியல், முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

15-வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என கூறி ஏராளமான பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எம்.வி.எம். நகர், அண்ணா நகர், ஆர்.எம்.காலனி, பழையது மற்றும் புதிது, சந்தை பகுதி, சவேரியார் பாளையம், பூச்சிநாயக்கன்பட்டி, குள்ளனம்பட்டி, பழைய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆர்.எஸ்.ரோடு, ரவுண்டு ரோடு, மலைக்கோட்டை, குடகனாறு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவுற்று தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்ச முடியாது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என்று கூறினார். #tamilnews
Tags:    

Similar News