செய்திகள்

சிதம்பரம் அருகே சுனாமி ஒத்திகை பயிற்சி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published On 2018-09-05 10:12 GMT   |   Update On 2018-09-05 10:12 GMT
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
கடலூர்:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை பயிற்சியை நடத்தியது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு குழு என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒத்திகை பயிற்சியில் முதலில் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுனாமியில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் சுனாமியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு டாக்டர்கள் விளக்கமளித்தனர்.

சுனாமி அறிவிப்பு வந்த உடனே பொதுமக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை நீச்சல் வீரர்கள் மாநில பேரிடர் மீட்புக்குழு, மருத்துவ குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் மற்றும் கடலூர் மாவட்ட போலீசார் 150-க்கும் மேற்பட்டோர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து படகு, லைப்ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு சிதம்பரம் சாமியார்பேட்டை உள்ளிட்ட சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெறும் இடங்களுக்கு சென்றனர்.

Tags:    

Similar News