செய்திகள்

சத்துணவு முட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-09-05 07:06 GMT   |   Update On 2018-09-05 07:06 GMT
சத்துணவு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Eggnutritioncorruption #HighCourt
சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பாணை தொடர்பாக தமிழக அரசு கடந்த 20-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்தும், அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில், கோழி பண்ணை உரிமையாளர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘முட்டை கொள்முதல் விவகாரத்தில் தனது முடிவை மாற்றிக்கொள்ள அரசுக்கு உரிமை உள்ளது.

இதில் குறிப்பிட்ட சிலருக்கு சாதகமாக செயல்படுவதற்காக இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. முட்டை கொள்முதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும், இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்கவுமே பல்வேறு நிபந்தனைகள் விதித்து இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர்களை டெண்டர் நடவடிக்கையில் அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர். இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தவேண்டியதுள்ளது. அதனால், இந்த டெண்டர் நடவடிக்கையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். அல்லது மனுதாரர்களையும் இந்த டெண்டரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் நேற்று கூறினார்.


இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘இந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை தெரிவித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். அதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்றார்.

இந்த வழக்கை வருகிற 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இந்த வழக்கின் பதில் மனுவை தமிழக அரசு வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அந்த பதில் மனுவுக்கு, மனுதாரர்கள் தரப்பில் 12-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அதாவது வருகிற 20-ந்தேதி வரை முட்டை டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்’.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். #Eggnutritioncorruption #HighCourt
Tags:    

Similar News