செய்திகள்

அஞ்சலக வங்கி சேவை வீடு தேடி வரும் - கவர்னர் கிரண்பெடி பேச்சு

Published On 2018-09-02 18:10 GMT   |   Update On 2018-09-02 18:10 GMT
அஞ்சலக வங்கி சேவை வீடுதேடி வரும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுச்சேரி:

பிரதமர் நரேந்திர மோடி மாவட்ட வாரியாக இந்தியா முழுவதும் உள்ள இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் (அஞ்சலக வங்கி) 650 கிளைகளை நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி புதுச்சேரி கிளை தொடக்க விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் வெங்கடேஸ்வரலு வரவேற்றார். விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு புதுச்சேரி அஞ்சலக வங்கி கிளையை தொடங்கி வைத்தார்.

பின்னர் கடன், பொருட்கள் வாங்க உதவுகிற ‘கியூ’ அட்டைகளை வழங்கினார். விழாவில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

கல்விக்கடன், விவசாயக்கடன் என எந்தவொரு கடனுக்கும் வங்கியை தான் அணுக வேண்டிய நிலை இருந்தது. இதற்காக வங்கிகளுக்கு தொலை தூரம் செல்லும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தொடங்கப்பட்டு உள்ள அஞ்சலக வங்கி சேவை திட்டத்தின் மூலம் வங்கியே வீடுதேடி வரும். இது மிகச்சிறந்த திட்டமாகும்.

அஞ்சலக வங்கி சேவைகள் தபால்காரர்கள் மூலம் நம்முடைய வீட்டிற்கே வந்து சேரும். இதன் மூலம் தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் பட்டுவாடா செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதுச்சேரி அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அகில் நாயர் நன்றி கூறினார். 
Tags:    

Similar News