செய்திகள்

திருபுவனையில் புதுவை அரசு பஸ் மோதி கணவன்-மனைவி படுகாயம்

Published On 2018-08-30 10:19 GMT   |   Update On 2018-08-30 10:19 GMT
திருபுவனையில் புதுவை அரசு பஸ் மோதி கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.

திருவுவனை:

திருபுவனை தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது63). மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (54). இவர்கள் புதுவையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திருபுவனைக்கு திரும்பினர். திருபுவனை மின்துறை அலுவலகம் அருகே வந்த போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கணவன்-மனைவி மீது மோதி விட்டு அருகில் உள்ள உயர்மின்னழுத்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

இதில் தூக்கிவீசப்பட்ட கணவன்-மனைவியை அருகில் உள்வர்கள் மீட்டு அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பஸ் மின்கம்பத்தில் மோதியதால் அங்கு மின்சாரம் தடைபட்டது. உடனே மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மின்தடையை சரிசெய்தனர் மேலும் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திருபுவனை போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். இதனை அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த இடம் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாததால் அங்கு அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனை மின்ஊழியர்கள் சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News