செய்திகள் (Tamil News)

விநாயகர் சிலை தயாரிக்கப்படும் குடோனில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2018-08-28 11:07 GMT   |   Update On 2018-08-28 11:07 GMT
விநாயகர் சிலை தயாரிக்கப்படும் குடோனில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.#VinayagarChathurthi

கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையம் , எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் பகுதிகளில் விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 80 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி இடிகரை வடக்கு தோட்டம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் விநாயகர் சிலைகள் பிளாஸ்டா பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படுவதாக கோவை கவுண்டம்பாளையத்திலுள்ள மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அந்த குடோனுக்கு சென்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விநாயகர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

தகவல் அறிந்து விஷ்வ இந்து பரி‌ஷத் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு உருவானது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனைக்காக சில விநாயகர் சிலைகளில் இருந்து சிறு சிறு பகுதிகளை எடுத்து தண்ணீரில் கரைத்து சோதனை செய்தனர். இதில் விநாயகர் சிலை பகுதிகள் தண்ணீரில் கரைந்து விட்டன.

இதனையடுத்து விநாயகர் சிலைகள் பிளாஸ்டா பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்றும் பேப்பர் போர்டு, பேப்பர் மற்றும் கார்டு போர்டு வைத்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது.

மேலும் ஆய்வுக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் சிறு பகுதிகளை எடுத்து சென்றனர்.

மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News