செய்திகள்

திண்டுக்கல் நாகல்நகர் சந்தையில் டயர்களை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல்

Published On 2018-08-27 10:09 GMT   |   Update On 2018-08-27 10:09 GMT
திண்டுக்கல் நாகல்நகர் வாரச்சந்தையில் டயர்களை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நாகல்நகரில் வாரச்சந்தை உள்ளது. இங்கு திங்கட்கிழமை தோறும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.

மேலும் நகர் பகுதி மக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை பெற்றுச் செல்கின்றனர். இதனால் சந்தை திங்கட்கிழமை தோறும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

மேலும் காய்கறி கழிவுகளை அங்கேயே கொட்டிச் செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தற்போது மர்ம நபர்கள் இப்பகுதியில் டயர்களை எரித்து அதில் இருந்து கம்பிகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். டயர்களை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை கிளம்பி குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது.

இதனால் வீட்டின் உள்ளே கூட பொதுமக்கள் இருமிக் கொண்டே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டயர்களை எரிப்பதனால் வெளியாகும் நச்சுப்புகை பொதுமக்களுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே அதிகாரிகள் நாகல் நகர் சந்தை பகுதியில் ஆய்வு செய்து குப்பைகள் கொட்டுவோர் மற்றும் டயர்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News