செய்திகள்

கை, காலில் முறிவு - கைதான ரவுடி தனசேகரன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-08-27 09:19 GMT   |   Update On 2018-08-27 09:19 GMT
தப்பி செல்ல முயன்றபோது தவறி விழுந்ததில் ரவுடி தனசேகரனின் வலது கை, இடது காலில் முறிவு ஏற்பட்டதால் அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராயபுரம்:

எண்ணூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன். இவன் மீது 7 கொலை வழக்கு உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசென்னை அனல் மின்நிலையம் அருகே ஒப்பந்ததாரர் ஜேம்ஸ் பால் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரூ.1 கோடி கேட்டு மிரட்டியபோது ஏற்பட்ட தகராறில் அவரை தனசேகரன் திட்டமிட்டு தீர்த்துகட்டியது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ரவுடி தனசேகரன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் அருகே நாப்பாளையத்தில் காரில் தப்பி செல்ல முயன்ற ரவுடி தனசேகரன், அவனது கூட்டாளிகள் தஞ்சாவூரை சேர்ந்த மதி, உளுந்தூர் பேட்டை மும்மூர்த்தி ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

அப்போது தப்பி செல்ல முயன்ற போது தவறி விழுந்ததில் தனசேகரனின் வலது கை, இடது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை பொன்னேரி கோர்ட்டில் போலீசார் கைதாங்கலாக அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். கூட்டாளிகள் மதி, மும்மூர்த்தி ஆகிய 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த தனசேகரனை மட்டும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.

அவனுக்கு முதல் மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News