செய்திகள்
வீராணம் ஏரி நிரம்பி இருக்கும் காட்சி.

வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு- 102 கிராமங்களில் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கினர்

Published On 2018-08-27 04:09 GMT   |   Update On 2018-08-27 04:09 GMT
வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து 102 கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 16 கிலோ மீட்டர் நீளமும், 5.6 கிலோ மீட்டர் அகலமும், 48 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்டது.

இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்தது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,400 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 145 கனஅடி குறைவாகும்.

ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.06 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.80 அடியாக உள்ளது. தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நேற்று விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரியின் 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவு கன அடி தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது.

வீராணம் ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில், ஸ்ரீ முஷ்ணம், சிதம்பரம், புவனகிரி, தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
Tags:    

Similar News