செய்திகள்

பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேற்றம்- குடியிருப்புகளுக்குள் புகுந்தது

Published On 2018-08-23 17:17 GMT   |   Update On 2018-08-23 17:17 GMT
மேலூரில் மதகுகளை பராமரிக்காததால் பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேறி குடியிருப்பு மற்றும் காலி இடத்தில் புகுந்தது. இதனால் அந்த இடமே தீவு போல் காட்சியளிக்கிறது.

மேலூர்:

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை பெய்ததின் காரணமாக முல்லை பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்து 142 அடி நீர்மட்டம் எட்டியது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து வைகை அணைக்கு இரைச்சல் பாலம், பெரிய குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து மதுரை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்காக பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேலூர் பகுதியில் ஒருபோக பாசனத்திற்காக நேற்று முன்தினம் வந்தடைந்தது.

மேலூர் ஆத்துக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பெரியாறு கால்வாய் மதகு பழுதாகி உடைந்துள்ளது. இதனால் சுந்தரப்பன் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாமல் வீணாகி வெளியேறுகிறது. 2 நாட்களாக அந்த தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் காலி இடத்தில் புகுந்தது. இதனால் அந்த இடமே தீவு போல் காட்சியளிக்கிறது.

பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Tags:    

Similar News