செய்திகள்

கும்பகோணம் குப்பை கிடங்கில் தீ விபத்து- 2 நாட்களாக தீயை அணைக்க முடியாததால் பொதுமக்கள் அவதி

Published On 2018-08-23 17:22 IST   |   Update On 2018-08-23 17:22:00 IST
கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிவதால் 2-வது நாளாக தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் உரக்கிடங்கு 50 ஏக்கரில் அமைந்துள்ளது. மேலும் 25 ஏக்கரில் உரமும், பிளாஸ்டிக் குப்பைகளும் பிரித்து மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அங்கு பிரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியைச் சுற்றிலும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவிடை மருதூர் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க போராடி முயன்றனர். இரவு நேரம் என்பதால் தீ பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மூச்சு திணறல் மற்றும் துர்நாற்றத்தினால் அவதிபட்டனர்.

குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிவதால் 2-வது நாளாக இன்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News