செய்திகள்

ஓணம் பண்டிகை- 100 லாரிகளில் கேரளா சென்ற காய்கறிகள்

Published On 2018-08-23 10:34 GMT   |   Update On 2018-08-23 10:34 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து ஓணம் பண்டிகைக்காக 100 லாரிகளில் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
ஒட்டன்சத்திரம்:

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளச்சேதம் காரணமாக கேரள அரசு சார்பில் நடைபெறும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அந்த நிதி மீட்புப்பணிக்கு பயன்படுத்தப்படும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

வெள்ளபாதிப்பு காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் யாரும் காய்கறிகள் வாங்க வரவில்லை. மேலும் பக்ரீத் பண்டிகைக்கு இங்கிருந்து அதிகளவு மாடுகள் கொண்டுசெல்லப்படும். இந்த ஆண்டு மாடுகள் குறைந்த அளவே கொண்டு செல்லப்பட்டன.

தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பொதுமக்கள் நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதில் பெரும்பாலும் சைவ உணவுகள் பரிமாறப்படுவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் அதிகளவு வியாபாரிகள் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் முகூர்த்த நாட்கள் என்பதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இருந்தபோதும் அதிகளவில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

சின்னவெங்காயம் கிலோ ரூ.40, கத்தரிக்காய் (20கிலோ பை) ரூ.400, தக்காளிபெட்டி ரூ.150 வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர் கடந்த சில நாட்களாக வழக்கம்போல் கேரளாவுக்கு 100 லாரிகளில் காய்கறிகள் அனுப்பபடுகின்றன.

மேலும் திண்டுக்கல், கொடைரோடு பகுதியில் இருந்து அத்தப்பூக்களும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. ஓணம் பண்டிகையை யொட்டி காய்கறிகளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News