செய்திகள்

இணையதளம் மூலமாக கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்- அதிகாரி தகவல்

Published On 2018-08-23 10:02 GMT   |   Update On 2018-08-23 10:02 GMT
பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வி தகுதியை இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:

பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வி தகுதியை இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 2018-ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வருகிற 30-ந் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணைய தளத்தில் (http.//tnvelaivaaippu.gov.in ) ஆன்லைனில் பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்துக்கு உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News