செய்திகள்

விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் வைத்தால் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2018-08-22 16:39 GMT   |   Update On 2018-08-22 16:39 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழாக்கள், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் உதவி கலெக்டர்களின் அனுமதி பெற்று வைக்க வேண்டும். கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். அதுபோல கடந்த ஆண்டுகளில் விநாயகர் ஊர்வலம் சென்ற பாதைகளில் மட்டுமே இந்த ஆண்டும் செல்ல அனுமதிக்க வேண்டும். 

காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், இயற்கை சாயம் கொண்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். செயற்கை வர்ணம் பூசிய பிளாஸ்டர் ஆப்பாரிஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு அனுமதியளிக்க கூடாது. மேலும் அதுபோன்ற விதிமுறைகள் மீறி சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

திரேஸ்புரம், முத்தையாபுரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் வேம்பார் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தவிர்த்து புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News