செய்திகள்

காது கேட்கும் கருவி வாங்க சேமித்த ரூ.10 ஆயிரம் பணத்தை கேரள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவர்

Published On 2018-08-22 05:02 GMT   |   Update On 2018-08-22 05:02 GMT
புதுச்சேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சேமித்த ரூ. 10 ஆயிரம் பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியாக வழங்கியுள்ளார். #KeralaFloodRelief
புதுச்சேரி:

கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மக்களின் துன்பத்தில் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவி வழங்க நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

புதுவை அரசின் சார்பில் ரூ.1 கோடி நிதி கேரள நிவாரணத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை வழங்கி உள்ளனர். கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக புதுவை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் புதுவை மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய அம்பி-ஸ்ரீவள்ளி தம்பதிகளின் மகன் ஜெயசூர்யா (வயது 16). செவித்திறன் குறைவான மாற்றுத்திறனாளியான இவர் தற்போது காது கேட்கும் கருவி பயன்படுத்தி வருகிறார்.

புதுவை புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஜெயசூர்யாவுக்கு அரசு மாதந்தோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த நிதியில் இருந்து புதிதாக காது கேட்கும் கருவி வாங்க தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்தார்.

இதுகுறித்து ஜெயசூர்யா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மாணவர் ஜெயசூர்யா நேற்று மாலை தனது பெற்றோருடன் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த மாணவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஜெயசூர்யாவின் தந்தை ஜெய அம்பி புதுவை கோர்ட்டில் இளநிலை எழுத்தராக உள்ளார். தாயார் ஸ்ரீவள்ளி வக்கீலாக உள்ளார்.
Tags:    

Similar News