செய்திகள்

சிதம்பரம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை- வாலிபர் கைது

Published On 2018-08-21 09:20 GMT   |   Update On 2018-08-21 09:20 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆசிரியர் வீட்டின் கதவை திறந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகையை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் சகானந்தா தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 53). இவர் சிதம்பரம் அருகே பரிவிளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவுக்குமேல் வைத்து விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இதையறிந்த வாலிபர் அந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தான். பின்பு அவன் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

இந்தநிலையில் நேற்று மாலை வெளியூர் சென்றிருந்த சுந்தர்ராஜன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. உள்ளே இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

இந்த சம்பவம் குறித்து அவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் மகன் சரண்ராஜ் (வயது 28) என்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சரண்ராஜ் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். அதனைத்தொடர்ந்து போலீசார் சரண்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட 16 பவுன் நகைகளை மீட்டனர்.
Tags:    

Similar News