செய்திகள்

திருவட்டார் அருகே காங்கிரஸ் செயலாளரை தாக்கிய டிராவல்ஸ் உரிமையாளர் கைது

Published On 2018-08-20 14:57 GMT   |   Update On 2018-08-20 14:57 GMT
பணத் தகராறில் காங்கிரஸ் செயலாளரை தாக்கிய டிராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவட்டார்:

திருவட்டார் கூற்றுவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது48). இவர் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளராக உள்ளார். மேலும் திருவட்டார் பஸ் நிலையம் அருகே பேக்கரி நடத்தி வருகிறார்.

நேற்று மாலை திருவட்டார் அருகே வெட்டுக்குழி என்ற இடத்தில் மோகன்தாஸ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மார்த்தாண்டத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் சசி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

மோகன்தாசின் மனைவியை வெளிநாட்டில் நர்சு பணிக்கு அனுப்புவதற்காக கூறி, சசி பண மோசடி செய்து விட்டதாக ஏற்கனவே அவர் மீது திருவட்டார் போலீசில் மோகன்தாஸ் புகார் செய்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதமும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதால் சசியிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி மோகன்தாஸ் கேட்டதால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் முற்றியதால் கட்டையால் மோகன்தாசை தாக்கி விட்டு சசி அங்கிருந்து சென்று விட்டார். இதில் காயம் அடைந்த மோகன்தாஸ் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது பற்றி திருவட்டார் போலீசிலும் மோகன்தாஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஆகியோர் சசி மீது வழக்குபதிவு செய்தனர். கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் டிராவல்ஸ் உரிமையாளர் சசியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News