செய்திகள்

திட்டக்குடியில் கோவில் குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட 30 வீடுகள் இடிப்பு

Published On 2018-08-20 16:44 IST   |   Update On 2018-08-20 16:44:00 IST
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவில் குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சுற்றி 30 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

இதையடுத்து ஆக்கிரமித்து வீடு கட்டிருந்த பொது மக்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினார்கள். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு வீடுகளை விட்டு பொதுமக்கள் காலி செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று திட்டக்குடி தாசில்தார் சத்தியன் தலைமையிலான அதிகாரிகள் வைத்தியநாதசாமி கோவில் குளம் பகுதிக்கு வந்தனர்.

பின்னர் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் உங்களுக்கு காலஅவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யவில்லை. எனவே, இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும். உங்கள் பொருட்களை எல்லாம் எடுத்துச்செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் வெளியே தூக்கி வந்தனர். அதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News