செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்ல கால் டாக்சி வசதி

Published On 2018-08-20 06:23 GMT   |   Update On 2018-08-20 06:23 GMT
மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல கால் டாக்சியை போனில் புக் செய்யும் வசதியை அளிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. #MetroTrain
சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்ட்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலில் பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்கு பயணிகள் எளிதாக செல்ல ரெயில் நிலைய வாசலில் ஷேர் ஆட்டோ, கார் வசதி செய்யப்பட்டது.

குறிப்பிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் பரிட்சாத்த முறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு இந்த சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஷேர் ஆட்டோ வசதி அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ளது.

இதன் மூலம் ரெயில் நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று பயணிகள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல கால் டாக்சியை போனில் புக் செய்யும் வசதியை அளிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

18604251515 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு போன் செய்து கால் டாக்சியை புக் செய்யலாம். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு இந்த சேவை ரூ.15 கட்டணத்தில் வழங்கப்படுகிறது.


அண்ணாநகர் மேற்கு ஏ.ஜி.டி.எம்.எஸ்., வடபழனி, ஆலந்தூர், கோயம்பேடு ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கால் டாக்சி புக் செய்யும் வசதி முதலில் அளிக்கப்பட இருக்கிறது.

சாலிகிராமத்தில் இருக்கும் பயணி வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்று விரும்பினால் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு காரை புக் செய்யலாம். உடனே கார் பயணி இருக்கும் பகுதிக்கு சென்று மெட்ரோ நிலையத்திற்கு அழைத்து வரும்.

அதே போல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லவும் காரை புக் செய்து கொள்ளலாம்.

இந்த சேவை படிப்படியாக அனைத்து ரெயில் நிலையத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், “வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கால் டாக்சியை புக் செய்யும் வசதி பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு பதிலாக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கினால் எளிதாக இருக்கும். இதன் மூலம் கார் டிரைவர், பயணி எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதை விரைவில் அறிமுகபடுத்துவார்கள் என்று நம்புகிறோம்” என்றனர். #MetroTrain
Tags:    

Similar News