செய்திகள்

திருமங்கலத்தில் பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2018-08-19 15:26 IST   |   Update On 2018-08-19 15:26:00 IST
பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேரையூர்

மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பிரபு-தேவி தம்பதியினர் தங்களது பெண் குழந்தை என ஒரு குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மஞ்சள் காமாலை பாதிப்புக்குள்ளான அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

இதனை தொடர்ந்து குழந்தை எங்கு பிறந்தது என்பது பற்றிய விவரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டபோது வெங்கடேஷ் பிரபு-தேவி தம்பதியர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த குழந்தை கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என கருதி போலீசில் புகார் செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெங்கடேஷ்பிரபு-தேவி தம்பதியினர் பணம் கொடுத்து குழந்தையை வாங்கி இருப்பது தெரியவந்தது.

திருமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமங்கலம் அருகே உள்ள பூலையாபுரத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி வயிற்றுவலி காரணமாக திருமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

அதே ஆஸ்பத்திரியில் மாணவிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அந்த குழந்தை வேண்டாம் என்று மாணவியும், அவரது பெற்றோரும் கூறி விட்டு 28-ந்தேதி அங்கிருந்து சென்றுள்ளனர்.

பிறந்த குழந்தைக்கு மஞ்சள்காமாலை தொற்று இருந்த நிலையில் அங்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வந்த மதுரையை சேர்ந்த வெங்கடேஷ்ராவ் தனது நண்பருக்காக அந்த குழந்தையை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர்தான் வெங்கடேஷ்பிரபு-தேவி தம்பதியினருக்கு குழந்தை வாங்கி கொடுத்துள்ளார் என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் அருகே மகளிர் தையல் நிறுவனம் நடத்தி வந்த பங்களாச் சேரியைச் சேர்ந்த முத்துப் பாண்டி (32) என்பவர்தான் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News