செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பிய செனகல் நாட்டு வாலிபரை பிடிக்க தேடுதல் வேட்டை

Published On 2018-08-18 14:44 IST   |   Update On 2018-08-18 14:44:00 IST
சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பிய செனகல் நாட்டு வாலிபரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து விமானம் வந்தது.

அதில் பயணம் செய்த ஆப்பிரிக்க நாடான செனகல்லைச் சேர்ந்த நிடியாமட்டர் (28) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி சென்னை வந்திருப்பது குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை விமான நிலையத்தில் உள்ள ஒரு தனியறையில் அமர வைத்தனர். விசாரணைக்கு பிறகு நிடியாமட்டரை கத்தார் நாட்டுக்கு திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் கத்தார் விமானம் அதிகாலை 4.45 மணிக்கே புறப்பட்டுசென்று விட்டதால் அவரை கத்தார் விமான நிறுவன அதிகாரிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் தனியறையில் அடைக்கப்பட்டு இருந்த நிடியாமட்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் விமான நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிடியாமட்டர் உரிய ஆவணம் இன்றி சென்னை ஏன் வந்தார்? போதை பொருள் கடத்தலில் தொடர்பு உடையவரா? அல்லது பயங்கரவாத கும்பலின் பின்னணியில் உள்ளவரா? என்று விசாரித்து வருகிறார்கள். அவரை விமான நிலையம் முழுவதும் தேடினார்கள். ஆனால் விமான நிலையத்திற்கு வெளியே தப்பி சென்று விட்டது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து கியூபிராஞ்ச் போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

அவரது புகைப்படம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை வைத்து சென்னை முழுவதும் தேடி வருகிறார்கள்.

மேலும் நிடியாமட்டர் விமான நிலையத்தில் இருந்து எப்படி தப்பி சென்றார்? என்பது பற்றியும் விசாரிக்கிறார்கள்.

Tags:    

Similar News