செய்திகள்

இரவில் பூட்டி கிடக்கும் ஓமலூர் மகளிர் காவல் நிலையம்- புகார் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

Published On 2018-08-17 10:11 GMT   |   Update On 2018-08-17 10:11 GMT
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மகளிர் காவல் நிலையம் இரவில் பூட்டி கிடப்பதால் புகார் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்டத்திற்கு துணை கண்காணிப்பாளருக்கு உட்பட்டு ஓமலூர் தாலுக்கா காவல் நிலையமாக ஓமலூர் காவல் நிலையம், காடையாம்பட்டி தாலுக்கா காவல் நிலையமாக தீவட்டிப்பட்டி காவல் நிலையம் மற்றும் தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தொளசம்பட்டி, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், குப்பூர் பகுதியில் இயங்கி வரும் போக்குவரத்து காவல் நிலையம், காமலாபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் என மொத்தம் ஒன்பது காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது.

இதில் ஓமலூர் தாலுகா காவல் நிலையமாக ஓமலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருவதால் முக்கியமான காவல் நிலையமாக பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு பல்வேறு வழக்கு மற்றும் விபத்து காரணமாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று எந்த நேரமும் காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஓமலூர் காவல் நிலையம் இரவு பத்து மணிக்கு சாத்தப்படுவதால் பொதுமக்கள் அவசர தேவைக்காக புகார் கொடுக்க வந்து விட்டு சாத்தியுள்ள காவல் நிலையத்தை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகின்றனர்.

இதேபோன்று ஓமலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 காவல் நிலைய எல்லைப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த பகுதி பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரவு பத்து மணிக்குமேல் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையமும் மூடப்படுவதால் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றங்களை புகாராக கொடுக்க வரும் பொதுமக்கள் புகார் கொடுக்க முடியாமல் திரும்பி விடுகின்றனர்.

இதன் காரணமாக ஓமலூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக இந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து 24 மணி நேரமும் பொதுமக்கள் பயன் கருதி காவல் நிலையங்களை மூடக்கூடாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News