செய்திகள்

தலைமை செயலக கட்டிட முறைகேடு விசாரணை ஆணையர் ரகுபதி ராஜினாமா

Published On 2018-08-17 14:50 IST   |   Update On 2018-08-17 14:50:00 IST
தி.மு.க ஆட்சியின் போது தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு என எழுப்பப்பட்ட புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். JusticeRagubathiResigns
சென்னை:

தி.மு.க ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு இருப்பதாக எழுபப்பட்ட புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை ஆணையம் குறித்தும், அதற்கான செலவினங்கள் குறித்தும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி சுப்புரமணியம், இது வீண் செலவு இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, இதுதொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி,  ஆகஸ்ட் 13-ம் தேதி ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்தார். இதுதொடர்பாக நீதிபதி ரகுபதி கூறுகையில், விசாரணை ஆணையம் பற்றி உயர்நீதிமன்றம் கூறிய கருத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஓய்வு பெற்ற பிறகு ஏதேனும் பதவியை தேடி தாம் செல்வதை போல் நீதிபதி சுப்புரமணியம் பேசியுள்ளதாக கூறிய விசாரணை ஆணைய தலைவர்  ஆணையத்தில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லாததால் பதவி விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ள ரகுபதி, விசாரணை ஆணையத்துக்கு என அரசு அளித்திருந்த கார், கணினி போன்றவற்றை திருப்பி அளித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் கட்டுவதில் ஊழல் ஏற்பட்டதாக உருவாக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்திருந்தது. இருப்பினும், ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதியின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #JusticeRagubathiResigns
Tags:    

Similar News