செய்திகள்

தலையணை, திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல 2-வது நாளாக தடை

Published On 2018-08-16 09:31 GMT   |   Update On 2018-08-16 09:31 GMT
காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணை, திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் களக்காடு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் உத்தரவின் பேரில் தலையணைக்கு செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணைக்கு செல்லும் வாயில் மூடப்பட்டு, வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல 2-வது நாளாக இன்று தடைவிதித்தனர்.

மேலும் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு-நாகர்கோவில் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் நாங்குநேரியான் கால்வாயில் செல்லும் தண்ணீர் உப்பாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

களக்காடு தாமரை குளத்தின் நடுமடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொதுப் பணித்துறையினர் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News