செய்திகள்
பலியான தயாளன்

வேலூர் அருகே கோவில் திருவிழாவில் சாமி தேர் டிரான்ஸ்பார்மரில் உரசியதால் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2018-08-14 04:58 GMT   |   Update On 2018-08-14 04:58 GMT
வேலூரில் இன்று நடந்த கோவில் திருவிழாவில் சாமி தேர் டிரான்ஸ்பார்மரில் உரசியதால் மின்சாரம் தாக்கி முதியவர் இறந்தார். 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் கொசப்பேட்டை சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 2 நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது.

இன்று காலை சாமி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் அம்மன் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே வந்த போது தேர் டிரான்ஸ்பார்மரில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தீப்பொறியுடன் புகை மண்டலம் எழுந்தது.

பக்தர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். தேரை அருகில் இருந்து பிடித்து கொண்டிருந்த தயாளன் (வயது 67). என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார். சீனிவாசன், பரசுராமன், சதீஷ்குமார், முருகன், சுந்தர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்தில் நின்று அழுதபடி கூச்சலிட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.சீனிவாசன் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தெற்கு போலீசார் பலியான தயாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விழாக்கோலம் பூண்டிருந்த அப்பகுதி இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது.

மின் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News