செய்திகள்

பிரான்ஸ் சுற்றுலா பயணியின் உடலை எரித்து புதைத்த என்ஜினீயர் கைது

Published On 2018-08-13 09:25 GMT   |   Update On 2018-08-13 09:25 GMT
ஓரினச்சேர்க்கையின் போது இறந்ததால் பிரான்ஸ் சுற்றுலா பயணியின் உடலை எரித்து புதைத்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள ஒலையக்குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் அழகிரி.

விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலுக்கு சென்றார். அப்போது வயலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே (வயது68) என்பவரின் பாஸ்போர்ட், டைரி உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கிய பை கிடந்தது.

இதைபார்த்த அழகிரி மதுக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர்.

அப்போது அந்த பையில் மதுக்கூரை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (வயது29) என்பவரின் முகவரி எழுதப்பட்டிருந்த துண்டுச்சீட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் திருமுருகனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிரான்ஸ் சுற்றுலா பயணி பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே உடலை புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இதை கேட்டு ஆடிப்போன போலீசார், திருமுருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறிய தகவல்கள் வருமாறு:-

சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் 2011 வரை பி.டெக் படித்தேன். அப்போது மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் நண்பர்கள் ஆனோம்.

மேலும் பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே தமிழகம் வரும் போது தன்னை தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். எங்களுக்குள் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்தது.

அதன்படி கடந்த மாதம் 31-ந்தேதி பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே சுற்றுலாவாக சென்னை வந்தார். சென்னையில் தங்கி இருந்த அவர் பின்னர் திருச்சி வந்தார். திருச்சியில் தங்கி இருந்த அவர் 5-ந்தேதி என்னை தொடர்பு கொண்டார்.

இதையடுத்து திருச்சி சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள எனது வீட்டிற்கு வந்தேன். அங்கு வைத்து 2 பேரும் மது குடித்தோம். பின்னர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமடைந்த நான் அவரை எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால் அவர் இறந்துவிட்டார்.

இதனால் அவருடைய உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். பின்னர் எனது வீட்டின் சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல் டயர் ஆகியவற்றைக் கொண்டு பியாரேபூட்டியார் பெர்னாண்டோரெனே உடலை எரித்தேன். எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல் மற்றும் எரியாமல் கிடந்த சதைப்பகுதியை 3 சாக்குகளில் அடைத்து மூட்டையாக கட்டி மதுக்கூரில் இருந்து வாட்டாக்குடி செல்லும் சாலையில் இரட்டை புளியமரத்தடி அருகே உக்கடை வாய்க்காலிலும், பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் உள்ள ஒரு வயலிலும் போட்டு வந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாக்குமூட்டையில் இருந்த உடலின் சதை பகுதிகள், எலும்பு ஆகியவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வாட்டாக்குடி உக்கடை கிராம நிர்வாக அதிகாரி தனவேல் கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் திருமுருகனை கைது செய்தனர்.
Tags:    

Similar News