செய்திகள்

ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2018-08-09 12:19 GMT   |   Update On 2018-08-09 12:19 GMT
ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு சோலார் இரணியன் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தா (வயது 30).

இவர் கிராம நிர்வாக அதிகாரி வேலை பெற முயற்சித்து வந்தார். இந்த தகவல் அறிந்த கரூர் மாவட்டம் பரஞ்சர்வழி குடித்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (57) என்பவர் சாந்தாவை தொடர்பு கொண்டார்.

‘‘உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்’’ என்று கூறிய செந்தில்குமார், அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டபடி ரூ. 3 லட்சம் பணத்தை செந்தில்குமாரிடம் சாந்தா கொடுத்தார்.

ஆனால் செந்தில்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து செந்தில்குமாரிடம் சாந்தா போன் செய்து கேட்டார்.

ஆனால் செந்தில்குமார் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் சாந்தா கேட்டதால், ‘‘வேலை வாங்கி தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்’’ என்று கூறி உள்ளார்.

மேலும் தொடர்ந்து இது பற்றி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சாந்தா புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கைதான செந்தில்குமார் கரூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றார்.

சுமார் 80 பேரை ஏமாற்றி ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளார். இந்த மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் செந்தில் குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் தற்போது சாந்தாவிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே இதுபோல வேறு யாரிடமும் செந்தில்குமார் மோசடி செய்துள்ளாரா? என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News