செய்திகள்

கருணாநிதி மறைவு: அனைத்துக் கட்சியினர் மவுன ஊர்வலம்

Published On 2018-08-09 11:21 GMT   |   Update On 2018-08-09 11:21 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய ராமேசுவரம் பகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
ராமேசுவரம்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்தார். அவரது ஆத்மா சாந்தியடைய ராமேசுவரம் பகுதியில் தி.மு.க. தொண்டர்கள், முன்னாள் நகரச் செயலாளர் ஜான்பாய் தலைமையில் அக்னிதீர்த்தம் கடற்கரையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ராமேசுவரம் ராமதீர்த்தம் பகுதியில் தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ராமேசுவரம் பகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் ராமேசுவரம் கோவில் காவல் நிலையம் முன்பிருந்து தொடங்கியது.

திட்டகுடி, மேலவாசல், நகை கடைபஜார், தேவர் சிலை,ரெயில் நிலையம், காந்தி நகர், தீட்சிதர் கொல்லை வழியாக பஸ் நிலையம் வந்தடைந்தனர்.

அங்கு அனைத்துக் கட்சியினர், ராமேசுவரம் நகர நிர்வாகிகள், கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை குறித்தும், சாதனைகள் குறித்தும் பேசினர்.

அதன் பின்னர் தி.மு.க. தொண்டர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய முடி காணிக்கை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் நிர்வாகி கருணாகரன், டிடிவி கட்சியின் நகரத்தலைவர் பிச்சை, வக்கீல் சங்க தலைவர் ஜோதிமுருகன்,செயலாளர் பிரபாகரன், மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ் உள்பட 500-க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி பகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை தி.மு.க.வினர் மவுனமாக ஊர்வலமாக சென்றனர்.

இதில் மாவட்ட பிரதிநிதி சவுந்திரபாண்டி உள்பட அனைத்து கட்சியினர், அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News