செய்திகள்

அடகுவைத்த நகையை மீட்டு தராததால் பெண்ணை தாக்கிய தம்பதியினர் கைது

Published On 2018-08-06 11:54 GMT   |   Update On 2018-08-06 11:54 GMT
அடகு வைத்த நகையை மீட்டு தராததால் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் பெண்ணை தாக்கினர்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி சாந்தி (வயது42). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த தேவி என்பவரிடம் தங்கநகையை கடனாக வாங்கி அடகு வைத்தார். ஆனால் அதன்பிறகு சாந்தி அந்த நகையை மீட்டுதரவில்லை. பலமுறை தேவி நகையை மீட்டு தர கேட்டும் சாந்தி காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று சாந்தி கம்பன் கலையரங்கம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது தேவி மற்றும் அவரது கணவர் கர்ணன் ஆகியோர் சாந்தியிடம் நகையை மீட்டு தருவது தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது சாந்தி 4 மாதம் அவகாசம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தேவியும், அவரது கணவர் கர்ணனும் நகையை உடனடியாக மீட்டு தரும்படி கேட்டனர். இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கர்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதன் கைப்பிடியால் சாந்தியின் முகத்தில் குத்தினார். இதில் சாந்திக்கு பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இதைபார்த்ததும் கணவன்- மனைவி இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சாந்தி பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கர்ணன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News