செய்திகள்

ஜெயலலிதா கையெழுத்து விவகாரம் - திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்குமா?

Published On 2018-08-05 09:06 GMT   |   Update On 2018-08-05 09:06 GMT
திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்த நிலையில் ஜெயலலிதா விரல் ரேகை சர்ச்சையாகி இருப்பதால் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
சென்னை:

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் சமீபத்தில் மரணம் அடைந்தார். அந்த தொகுதி விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

வழக்கு விசாரணையின் போது வேட்பாளரை பரிந்துரை செய்து தேர்தல் கமி‌ஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் அனுப்பிய படிவத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்ததில், சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதையடுத்து டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் ஆஜராகி, தன் முன்புதான் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது என்று வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், ‘டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளார். 2016-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவிடம் அனைத்து ஆவணங்களையும் வாசித்துக் காட்டி, படிவத்தில் பெரு விரல் ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார். ஆனால், அது தொடர்பான அனுமதி உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம், அதேநாளில் இரவு 8 மணிக்குத்தான் பிறப்பித்துள்ளது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, அதாவது 2 மணி நேரத்துக்கு முன்பாகவே ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி கூறுவது பொய்’ என்று வாதிட்டார்.

மேலும் அவரது வாதத்தில், ‘திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு, 2016-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கடிதங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த கடிதத்தையும், அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கே ஜெயலலிதாவுக்கு படித்து காட்டி விட்டதாக டாக்டர் பாலாஜி கூறியுள்ளார். எனவே, இவர் சொல்வது பொய். படிவத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகைதான் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதில் சந்தேகம் உள்ளது’ என்றார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ஏ.கே.போசின் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவின் விரல் ரேகை சர்ச்சையாகி இருப்பதால் அது போலியானதா? உண்மையானதா? என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. எனவே கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Tags:    

Similar News