செய்திகள்

மறு மதிப்பீட்டில் ஊழல்: மேலும் பேராசிரியர்கள் சிக்குகிறார்கள்- போலீஸ் விசாரணை தீவிரம்

Published On 2018-08-04 07:08 GMT   |   Update On 2018-08-04 07:08 GMT
மறுமதிப்பீட்டிற்கு லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் மேலும் சில பேராசிரியர்கள் சிக்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. #AnnaUniversity #RevaluationScam
சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

அந்த செமஸ்டரில் தோல்வி அடைந்த மாணவர்களும், குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் சுமார் 3 லட்சம் பேர் தங்களது தேர்வு தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தனர்.

அவர்களில் 90 ஆயிரம் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்தது. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. அதாவது அதிக மதிப்பெண்கள் போடுவதற்கு ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 90 ஆயிரம் பேரில் பாதி பேர் பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. அதன்படி கணக்கிட்டால் அந்த ஒரு செமஸ்டரில் மட்டும் சுமார் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் 23 மையங்களில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு பணிகள் நடந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மறு மதிப்பீட்டு பணிகளில்தான் அதிக அளவு மோசடி நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்புப் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா உள்பட 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உமா சேர்க்கப்பட்டுள்ளார். மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான விஜயகுமார், மண்டல முன்னாள் அதிகாரி சிவக்குமார் ஆகிய இருவரும் 2-வது, 3-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டில் நடந்த மோசடிகள் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்ற 16,636 மாணவர்கள் மீது அவர்களுக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 100 பேரிடம் விசாரிக்கும் பணி நடந்து வருகிறது.

உமா

இது தவிர அதிகாரிகள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டில் பெரிய அளவில் கூட்டு சதி செய்து முறைகேடுகள் நடந்து இருப்பது உறுதியாகியுள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், டாப்- ரேங்க் கல்லூரிகள், மாணவர்கள், பேராசிரியர்கள், இடை தரகர்கள் ஆகியோர் ஒருகிணைந்துதான் இந்த ஊழலை செய்துள்ளனர். சில தனியார் கல்லூரிகள் தங்களது கல்லூரிக்கு நல்ல பெயர் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நிறைய மாணவர்களின் தேர்வு தாள்களை மறு மதிப்பீட்டுக்கு அனுப்பி உள்ளன.

சில கல்லூரிகள் தங்களது மாணவர்களில் 90 சதவீதம் பேரின் தேர்வு தாளை மறு மதிப்பீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. அந்த கல்லூரிகள் எப்போதும் பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் கல்லூரிகளாகும். இந்த கல்லூரி மாணவர்களின் மறு மதிப்பீடுகளில்தான் அதிக அளவில் மோசடி நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த கல்லூரிக்கும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே சிலர் பணம் வாங்கிக் கொடுக்கும் இடைதரகர்களாக இருந்துள்ளனர். அந்த இடைதரகர்கள் அனைவரும் தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளின் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் வேட்டையாட லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீசார் கைப்பற்றிய சில ஆவணங்களின் மூலம் திட்டமிட்டு மதிப்பெண் மோசடி நடந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெறும் 7 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மறு மதிப்பீட்டில் 74 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இப்படி நிறைய மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். எனவே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டுமின்றி நிறைய தனியார் கல்லூரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையம் விரிவடையும் கட்டத்தில் எந்த கல்லூரிகளும் சிக்க வாய்ப்புள்ளது. அப்போது ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் அதிக அளவில் சிக்குவார்கள்.

மறுமதிப்பீட்டிற்கு லஞ்சம் கொடுத்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் திண்டிவனம் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள மேலும் பேராசிரியர்கள் பலர் சிக்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் பேராசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

என்ஜினீயரிங் கல்லூரியில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் யாருடனும் செல்போனில் பேசுவதை தவிர்த்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் வெளிநபர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்தில் புரோக்கர்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். #AnnaUniversity #RevaluationScam
Tags:    

Similar News