செய்திகள்

சாரிடன், டிகோல்டு உள்பட 300 மருந்துகளுக்கு தடை? - மத்திய அரசு ஆலோசனை

Published On 2018-08-04 06:51 GMT   |   Update On 2018-08-04 06:51 GMT
சாரிடன், டிகோல்டு உள்பட 300 மருந்துகளுக்கு தடை விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. #bandrugs
சென்னை:

மருந்து, மாத்திரைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு ஒரு வழக்கு விசாரணை நடந்தது.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, “நிர்ணயிக்கப்பட்ட கலவை அளவு” கொண்ட மருந்து மாத்திரைகளில் எவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து பரிந்துரை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.



இதையடுத்து மருந்து தொழில் நுட்ப ஆலோசனை கழகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், மாத்திரைகள் பற்றி ஆய்வு செய்தது. அப்போது நிறைய நிறுவனங்களின் இருமல் மருந்துகள், வலி தீர்க்கும் மாத்திரைகள் சாப்பிட ஏற்றவை அல்ல என்பது தெரிய வந்தன.

இந்த மருந்துகள் சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கழகம் கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து சுமார் 300 மருந்து, மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்கலாம் என்று அந்த கழகம் பரிந்துரை செய்துள்ளது.

தலைவலி, காய்ச்சல், ஜலதோ‌ஷம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளும் தரம் இல்லாமல் இருப்பதாக அந்த கழகம் எச்சரித்துள்ளது. குறிப்பாக பென்சிடல், பன்ட்ரம், சாரிடன், டி கோல்டு, டோட்டல் போன்ற மருந்து, மாத்திரைகளை தயாரிக்க தடை விதிக்க அந்த கழகம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் அந்த பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் சாரிடன் போன்ற மாத்திரைகளை தயாரிக்க, விற்க தடை வரும் என்று கூறப்படுகிறது.

மருந்து தொழில் நுட்ப ஆலோசனை கழகம் சுமார் 300 மருந்துகளை தடுக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த மருந்துகள் ரூ.2183 கோடி அளவுக்கு விற்பனை ஆகிறது.

எனவே இந்த நிறுவனங்கள் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வார்கள் என்று தெரிகிறது. #bandrugs


Tags:    

Similar News