செய்திகள்

கடற்கரை-செங்கல்பட்டு பாஸ்ட் மின்சார ரெயிலை ரத்து செய்ததால் விபத்து குறைந்தது

Published On 2018-08-03 08:49 GMT   |   Update On 2018-08-03 08:49 GMT
கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கிய பாஸ்ட் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்ட பிறகு விபத்து குறைந்துள்ளதை ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்துள்ளது. #TrainAccident
சென்னை:

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நுழைந்தபோது படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த பயணிகள் 5 பேர் உடல் சிதறி கடந்த மாதம் 24-ந்தேதி பலியானார்கள். இந்த சம்பவம் ரெயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

கடற்கரை- திருமால்பூர் வரை சென்ற பாஸ்ட் மின்சார ரெயிலில் பயணம் செய்த வாலிபர்கள் தான் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் பாதையில் ‘பாஸ்ட்’ மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 10 நாட்களாக மின்சார ரெயில் பாதையில் மட்டுமே அனைத்து மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் பொது மக்களிடமும், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்.

பரங்கிமலை ரெயில் விபத்துக்கு பிறகு எல்லா மின்சார ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை, மாலை பீக்அவர்சில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.

தற்போது பாஸ்ட் மின்சார ரெயில்கள் சாதாரண ரெயிலாக இயக்கப்படுவதால் மற்ற மின்சார ரெயிலை போல அனைத்து நிலையங்களிலும் நின்று செல்கிறது.

தினமும் 7 பாஸ்ட் மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. அந்த ரெயில்கள் இப்போது எல்லா நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே நேரத்தில் செங்கல்பட்டு, திருமால்பூர் போன்ற நீண்ட தூரத்தில் இருந்து வரும் பயணிகள் வேகமாக செல்ல முடியாததால் ஆத்திரம் அடைகின்றனர்.

பாஸ்ட் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சாதாரண ரெயிலாக மாற்றப்பட்டதால் தற்போது பீக் அவர்சில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படுகிறது.

மேலும் எல்லா நிலையங்களிலும் அனைத்து மின்சார ரெயில்களும் நின்று செல்வதால் பயணிகள் பதட்டம் அடையாமல் நிதானமாக பயணம் செய்கிறார்கள்.

இதனால் விபத்து குறைந்துள்ளது. பரங்கிமலை விபத்துக்கு பிறகு மின்சார ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

பாஸ்ட் மின்சார ரெயில் தாம்பரம், கிண்டி, மாம்பலம் போன்ற நிலையங்களில் மட்டும் தான் நின்று சென்றது. இதனால் மற்ற பகுதிகளுக்கு செல்லக் கூடியவர்கள் அதில் இருந்து இறங்கி மற்றொரு மின்சார ரெயிலில் பயணம் செய்ய தண்டவாளத்தை கடப்பார்கள். அப்போது ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறும்.

ஆனால் பாஸ்ட் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்ட பிறகு விபத்து குறைந்துள்ளதை ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்துள்ளது.

அதனால் இனி எக்ஸ்பிரஸ் பாதையில் பாஸ்ட் சர்வீசை முழுமையாக ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.  #TrainAccident
Tags:    

Similar News