செய்திகள்
சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள்
சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வு செய்யப்பட்டு சுமார் 50 கிலோ பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
தமிழக அரசு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் அனைத்து வகையான ஒரு தடவை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் பைகள் உள்ளிட்ட பொருட்களை நிரந்தரமாக தடைசெய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்காக நகர வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து நகர்பகுதியில் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டதில் சுவாமி சன்னதி தெரு, ராஜபாளையம் சாலை, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வு செய்யப்பட்டு சுமார் 50 கிலோ பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு ரூ. 2600 அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாரதியார் 8-ம் தெருவில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் 410 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது எனவும், மேலும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும், பொதுமக்களுக்கு எக்காரணம் கொண்டும் இலவசமாக பிளாஸ்டிக் கேரிபைகளை விநியோகம் செய்யக் கூடாது, மீறி இனி தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் கேரிபைகள் ஒழிப்பு பணியில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின்படி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், பிச்சையா பாஸ்கர், சக்திவேல், மாதவராஜ்குமார் மற்றும் துப்புரவுபணி மேற்பார்வையாளர்கள், நகராட்சிப்பணியாளர்கள் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.