செய்திகள்

பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து பலி

Published On 2018-07-31 12:16 GMT   |   Update On 2018-07-31 12:16 GMT
திண்டிவனத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அபினேஷ் (வயது 14). இவன் திண்டிவனத்தில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

அதேப்போல் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக நெய்குப்பியில் இருந்து திண்டிவனம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினான். அந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபினேசுக்கு பஸ்சின் சீட்டில் உட்காருவதற்கும், உள்ளே நிற்பதற்கும் இடம் கிடைக்கவில்லை. இதனால் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தான். திண்டிவனம் காந்தி சிலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது நிலைதடுமாறிய அபினேஷ் திடீரென பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபினேஷ் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து ரோசனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News