செய்திகள்

கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2018-07-30 18:26 IST   |   Update On 2018-07-30 18:26:00 IST
கல்விராயன்பேட்டையில் காவிரி ஆற்றில் கரை உடைப்பு சீர்செய்யப்பட்டதால் கல்லணை கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் திறப்பு படிபடியாக அதிகரிக்கபட்டது.
பூதலூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களாகும். இங்கு பல லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் முழுமையாக சம்பா சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் விவசாய பணிகள் இல்லாததால் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதியில் நல்லமழை பெய்ததை தொடர்ந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் கடந்த 22-ந்தேதி கல்லணையில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு காவிரி ஆறு, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றுக்கு திறக்கப்படட தண்ணீர் கல்லணை கால்வாய் வழியாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்றது.

இந்த நிலையில் தஞ்சை அருகே கல்விராயன்பேட்டையில் காவிரி ஆற்றில் கரை உடைந்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் கல்லணை ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உடைப்பு சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் கடந்த 28-ந்தேதி கல்லணை கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று கல்லணையில் 760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணையில் படிபடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பம்பு செட் தண்ணீரை பாசனத்தை கைவிட்டு கால்வாயில் வரும் தண்ணீர் கொண்டு பாசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது காவிரி ஆற்றில் 9200 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 9200 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 6000 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

கொள்ளிடத்தில் நேற்று 10,287 கன அடி திறக்கப்படடது. கடலுக்கு வீணாக செல்வதாக விவசாயிகள் புகார் செய்தனர். இதனால் தற்போது கொள்ளிடத்துக்கு 6 ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது.

வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்கு மேல் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News