செய்திகள்

தருமபுரியில் குட்கா பொருட்கள் குடோனில் பதுக்கி விற்பனை: கைதான வடமாநில வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2018-07-29 16:25 GMT   |   Update On 2018-07-29 16:25 GMT
தருமபுரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை குடோனில் பதுக்கி விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி:

தருமபுரி சந்தைப் பேட்டையில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்சில் ஒரு ஆலை குடோனில் குட்கா பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் போலீசார் அந்த குடோனில் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 30 அட்டை பெட்களில் 3 லட்சத்து 500 பாக்கெட்டுகளில் குட்கா, பான்பராக் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் என்றும் தெரியவந்தது.

உடனே போலீசார் பிடிப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். குடோனில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் ராஜாஸ்தான் மாநிலம் தளியான ஜாலூரைச் சேர்ந்தவர் குபராம் சவுதாரியா கவாஸ். இவரது மகன் ஜீவாராம் (வயது 18) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் சேர்ந்து குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து வேன் மூலம் கடத்தி வரப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தருமபுரியில் குடோனை வாடகை எடுத்து சப்ளை செய்தது தெரியவந்தது.

இதில் ஜீவாராமை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சங்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரிசி குடோன் வைத்திருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சம்பவம் சந்தைபேட்டை பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News