செய்திகள்

நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி

Published On 2018-07-28 16:39 GMT   |   Update On 2018-07-28 16:39 GMT
கரூரில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர்:

தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்தில் பிறந்த அப்துல்கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணியாற்றி அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். அதோடு மட்டும் அல்லாமல் இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்று நாட்டிற்கு அளப்பரியா பணிகளை செய்தார். நேற்று அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கரூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் அவரது உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கரூர் கோட்டையண்ணன் கோவில் தெருவிலுள்ள ஒரு டீக்கடையில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அங்கு வரும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியாக பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்ட போதிலும், மரக்கன்று நட்டு உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கிற செயல்பாட்டில் தனது வாழ்நாள் முழுவதும் தீவிரமாக இருந்தவர் அப்துல்கலாம்.

எனவே அவரது நினைவு தினத்தையொட்டி அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர். இதேபோல் கரூரில் பல்வேறு தெருக்களிலும் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கரூரை அடுத்துள்ள பசுபதிபாளையம் முடி திருத்துவோர் மருத்துவ சங்கம் சார்பில் கரூர் அருகே உள்ள செல்லாண்டிப்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக அப்துல்கலாம் உருவப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், முருகராஜ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News