செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டித்து நகராட்சிகள் முன்பு 30-ந்தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-28 11:18 GMT   |   Update On 2018-07-28 11:18 GMT
நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய நகராட்சி அலுவலகங்களின் முன்பு 30-ந்தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தென்காசி:

நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஊழலில் ஊறித்திளைக்கும் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூபாய் 3500 கோடிக்கும் அதிகமான நிதி இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. அந்த பணத்தை மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவதற்கு இன்றைய தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை.

மத்திய அரசின் மானிய உதவித்தொகையினை பெற்று உள்ளாட்சி அமைப்புக்களை வலுப்படுத்த முடியாத எடப்பாடி அரசு வாடகைதாரர்கள், வணிகப்பெருமக்கள், ஏழை எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வகையில் சொத்துவரியை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

இதனை கண்டித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வருகிற 30-ந்தேதி காலை 10 மணிக்கு நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய நகராட்சி அலுவலகங்களின் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தொண்டர்களுடன் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News