செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியம் ரூ.900 ஆக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

Published On 2018-07-27 22:41 GMT   |   Update On 2018-07-27 22:41 GMT
மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியத்தை, ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-2013-ம் ஆண்டில், 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மேல்பாக்கம் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு, தரமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கு ஏதுவாக நாள் ஒன்றுக்கு 15 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்பட்டு வந்த உணவூட்டு மானியத்தை மாதமொன்றுக்கு ரூ.650 என உயர்த்தி ஆணையிட்டார்.

தமிழ்நாட்டில் செயல்படும் 74 அரசு இல்லங்கள் மற்றும் 228 சிறப்புப் பள்ளிகளில் உள்ள 12 ஆயிரத்து 3 மாற்றுத்திறனாளிகள், ஆண்டுக்கு 8 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பில் மாதம் ஒன்றுக்கு 650 ரூபாய் உணவூட்டு மானியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

இந்தநிலையில், சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சத்தான உணவை வழங்கும் பொருட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் 650 ரூபாய் மாத உணவூட்டு மானியத்தை, ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்கப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தம் 11 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News