செய்திகள்

வடசேரியில் லாட்டரிச்சீட்டு விற்ற மேலும் ஒருவர் கைது

Published On 2018-07-27 14:22 GMT   |   Update On 2018-07-27 14:22 GMT
தமிழகம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் வடசேரியில் தடையை மீறி லாட்டரிச்சீட்டு விற்ற மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தடையை மீறி லாட்டரிச்சீட்டு விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குமரி மாவட்டம் கேரள மாநிலம் எல்லையில் இருந்து லாட்டரிச்சீட்டுகள் கொண்டு வரப்பட்டு நாகர்கோவில் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. மேலும் ஆன்-லைனிலும் லாட்டரிச் சீட்டு விற்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் லாட்டரிச்சீட்டு விற்பவர்களை  கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வடசேரி பகுதியில் லாட்டரிச் சீட்டு விற்றதாக போலீசார் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடசேரி பஸ் நிலையம் முன்பு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது வடசேரி பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 60) என்பதும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டை விற்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். குமரி மாவட்டம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பவர்களை கண்காணித்து வருகின்றனர். லாட்டரிச்சீட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீ சார் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News