செய்திகள்

தூர்வாரும் பணி மெத்தனம்: தஞ்சை விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2018-07-27 16:16 IST   |   Update On 2018-07-27 16:16:00 IST
மேட்டூர் அணை திறந்த நிலையில், பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதை கண்டித்து தஞ்சை விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

இந்த நிலையில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு மனு கொடுத்து விட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு 4 ஆண்டில் விவசாயிகளுக்கு எந்த சலுகைகளையும் செய்யவில்லை. வேளாண் பொருள்களுக்கு கட்டுபடியான விலையை அறிவிக்கவில்லை. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 505, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் கேட்டால் நெல்லுக்கும், கரும்புக்கும் ரூ.200 அறிவித்துள்ளது. மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மேட்டூர் அணை திறந்த நிலையில், பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே தூர்வாரும் பணியை எந்திரங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

2018-ம் ஆண்டிற்கு நடப்பு பருவ சம்பா சாகுபடி செய்வதற்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வெளியே வந்த அவர்கள் கையில் அச்சு வெள்ளம் வைத்து கொண்டும், தென்னை மரத்தின் மட்டையை அடித்து கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது. ஆனால் இந்த வெள்ள நீர் எங்கேயும் தங்காமல் கடலுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் கையில் அச்சு வெள்ளத்துடம் வந்துள்ளோம் என்றனர். #tamilnews
Tags:    

Similar News